நாராயணமூர்த்தியின் கனவு ( உளறல் )
“இந்தியாவிலுள்ள வறுமையை ஒழிக்க முதலாளித்துவமே ஒரே வழி” என்று திருவாய் மலர்ந்துள்ளார் இன்போசிஸ் நாராயணமூர்த்தி. அதோடு நிற்கவில்லை.“அந்த ஒரு விஷயம்தான் நமக்கு நம்பிக்கை அளிப்பதாக உள்ளது” என்றும் கூறியுள்ளார்.சிஎன்என்-ஐபிஎன் தொலைக்காட்சிக்கு அளித்துள்ள பேட்டியில்தான் இவ்வாறு குறிப்பிட்டார்.
முதலாளித்துவத்தால் வறுமை தீர்ந்து விட்டது என்று ஒரு நாட்டை உதாரணமாகக் காட்டியிருந்தால் அவர் கூறுவது நம்பும்படியாக இருந்திருக்கும்.
2000ல் வறுமையில் வாழும் அமெரிக்க குடிமக்களின் எண்ணிக்கை 3 கோடியாக இருந்தது. 2005ல் அந்த எண்ணிக்கை 3 கோடியே 70 லட்சமாக அதிகரித்துள்ளது.வறுமையால் வாடுபவர்களில் 1 கோடியே 30 லட்சம் பேர் குழந்தைகளாவர். இது அமெரிக்க அரசு தரும் அதிகாரப்பூர்வ தகவலாகும். இவர் கூறும் முதலாளித்துவத்தின் தலைமையகத்துடைய லட்சணமே இது தான். இந்தியாவை விட பணம் அதிகம் புழங்கும், மக்கள் தொகை குறைவாக உள்ள அமெரிக்காவுக்கே இந்தக் கதியென்றால் நமக்கு கட்டுப்படியாகுமா?
கம்யூனிசத்தை நடைமுறைப்படுத்திய அனைத்து நாடுகளும் தோற்று விட்டன என்று குற்றம் சாட்டியுள்ளார்.“பார்த்தீர்களா...கம்யூனிச நாடுகளில் வாழ்க்கைத்தரம் எப்படி இருந்தது?தற்போது முதலாளித்துவத்தை நடைமுறைப்படுத்தியவுடன் அந்நாட்டு மக்களின் வாழ்க்கை பிரமாதமாக உள் ளது”என்று கூறியிருந்தால் கேட்பவர்களுக்கு நம் பிக்கையை ஊட்டியிருக்கும்.சோஷலிச அமைப்பு சிதைக்கப்பட்ட பிறகு ரஷ்யாவிலும் சரி, கிழக்கு ஐரோப்பிய நாடுகளிலும் சரி, பெரும்பான்மையான மக்களின் வாழ்க்கைத்தரம் சீரழிந்துள்ளது என்பதுதானே உண்மை!
அமெரிக்காவின் சட்டவிரோதத் தடைகளையும் மீறி சுகாதாரம் மற்றும் கல்வித்துறைகளில் கியூபா பெரும் சாதனைகளைச் செய்தது சோச லிசத்தினால்தானே? வெறும் 1.9 சதவீதத்தினர் தான் அங்கு வேலைவாய்ப்பின்றி
இருக்கின்றனர். கம்யூனிசம் தோல்வியுறவில்லை.
“முந்தைய சமூகங்களுக்குச் சிறிதும் குறையாத அளவில் இன்றைய முதலாளித்துவச் சமூகம்,மக்களில் மிகவும் அதிகமான பெரும்பான்மையினரைச் சிறு பான்மையினர், மேன்மேலும் குறைந்து கொண்டிருக்கிற சிலர் சுரண்டுவதற்காகப் பயன்படுத்து கின்ற பகட்டான நிறுவனமே (முதலாளித்துவம்) என்பது அம்பலப்படுத்தப்பட்டுவிட்டது” என்று ஏங்கெல்ஸ் கூறியது இன்றைக்கும் பொருந்தக் கூடியதாகத்தான் இருக்கிறது.
லத்தீன் அமெரிக்க நாடுகளில் நவீன பொருளாதாரக் கொள்கைகளையும், முதலாளித்துவ ஏகாதிபத்தியத்தையும் எதிர்த்து மக்கள் கிளர்ந்தெழுந்து வருவது முதலாளித்துவத்தின் வெற்றி என்று நாராயணமூர்த்தி கருதிக்கொள்கிறாரா?
ஆட்குறைப்பு உரிமை தேவை என்று கோரிக்கை வைத்துள்ளார். சமூகத்தின் மீது எவ்வளவு அக்கறை பாருங்கள். கோடிக் கணக்கானோர் வேலை தேடி அலைந்து கொண்டிருக்கும் இடத்தில் ஆட்குறைப்பு உரிமைகோரும் நாராயண மூர்த்தியின் கவனம் தன் சகாக்களின் லாபத்தைச் சுற்றியே வருகிறது. அது சரி, குருட்டுக் கழுதைக்கு இருட்டைப் பற்றி என்ன கவலை?
அனைத்து பொதுத்துறை நிறுவனங்களையுமே தனியார் மயமாக்க வேண்டும் என்று கூறியுள்ளார். நேருவின் நவீன இந்தியாவின் ஆலயங்களில் ஒன்றான பொதுத்துறை நிறுவனத்தில் இளம் பொறியாளராக பணியில் அமர்வது தனது கனவாக இருந்தது என்று 2000ல் அளித்த பேட்டியில் தெரிவித்தவர் இந்த நாராயணமூர்த்தி (ஆதாரம் -இந்தியா-செமி னார்.காம்).அந்த ஆலயங்களைத்தான் கரசேவை நடத்தி சின்னாபின்னமாக்கத் துடிக்கத் தொடங்கியிருக்கிறார்.
கல்வி, சுகாதாரம், வறுமை ஒழிப்பு, தொழில் வளர்ச்சி ஆகியவற்றில் அளப்பரிய சாதனைகளைச் செய்த சோசலிசத்தின் மீது இவரை 60 மணி நேரம் விசாரித்ததால் (பல்கேரியாவுக்கு பயணம் செய்தபோது) வெறுப்பு ஏற்பட்டு விட்டதாம். நமது நாட்டின் பாதுகாப்புத்துறை அமைச்சரை நிர்வாணமாக்கி சோதனையிட்டார்களே. ஞாபகமிருக்கிறதா நாராயணமூர்த்தி அவர்களே?. 60 மணி நேர விசாரணை உங்களை முதலாளித்துவவாதியாக மாற்றியது நியாயம் என்றால், நாட்டின் பாதுகாப்புத் துறை அமைச்சரை காட்டுமிராண்டித்தனமாக அமெரிக்க அரசு நிர்வாணமாக்கியது ஒன்றே போதுமே, இந்த நாடு முழுவதும் இடதுசாரி மயமாவதற்கு.
நாசகரப் பாதையில் இந்தியா செல்ல வேண்டும் என்ற ஆசையோடு, அவ்வாறு செல்வது விரைவு படுத்தப்பட வேண்டும் என்ற அவசரம் அவரது குரலில் தெரிகிறது.
நான் மனதால் முதலாளித்துவவாதி. இதயத்தால் சோசலிசவாதி என்று ஒரு பேட்டியில்(தி இந்து, 3.7.06) கூறியவர்தான் இந்த நாராயணமூர்த்தி. பணம் வந்தவுடன் இதயத்தைப் பறி கொடுத்து விட்டார் போலும். தூக்கம் கலைந்ததால் ஏற்பட்ட உளறல் போலத் தெரியவில்லை. வேஷம் கலைந்த தாகவே படுகிறது.

3 comments:
அருமையாக எழுதியுள்ளீர்கள் !!
நாராயணமூர்த்தி...ம்..ம்..
அவரால் இந்தியா என்ன ஆனது என்று இப்போடு தெரியாது.
முதலாளித்துவ அமெரிக்காவில் இவர் சமீபத்திய காத்ரீனா அவலங்களைப் பார்க்கவில்லை என்றே நினைக்கிறேன்.
பார்க்க:
நாரயணமூர்த்தி மன்மோகன்சிங் புனிதர்களா?
http://kalvetu.blogspot.com/2006/10/blog-post_09.html
Fantastic you torn out the mask of Narayanamurthy.
Post a Comment