மம்தா அவிழ்த்துவிட்ட புளுகு மூட்டை அம்பலம்
மாவோயிஸ்டுகள்-திரிணாமுல் கூட்டு வன்முறைக்கு இரையான மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியின் ஊழியர்கள் மற்றும் ஆதரவாளர் களின் பட்டியலோடு பிரதமரை இடது முன்னணியைச் சேர்ந்த தலைவர்கள் சந்தித்தனர். போட்டிக்கு திரிணாமுல் காங்கிரசின் தலைவரும், மத்திய அமைச்சருமான மம்தா பானர்ஜியும் ஒரு பட்டியலைத் தயார் செய்து பிரதமரைச் சந்தித்தார். அதில் 83 நபர்களின் பெயர்கள் இடம் பெற்றிருந்தன. அவர்களின் உயிரிழப்பிற்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியே காரணம் என்று அவர் குறிப்பிட்டார். திரிணாமுல் காங்கிரஸ் வெளியிட்ட இந்தப் பட்டியல் குறித்த விசாரணைகள் பல அதிர்ச்சி தரும் தகவல்களைத் தருகின்றன.
இது குறித்து செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசிய மார்க்சிஸ்ட் கட்சியின் அரசியல் தலைமைக்குழு உறுப்பினரான சீத்தாராம் யெச்சூரி, அந்தப் பட்டியலில் இடம் பெற்றுள்ளவர்களில் சிலருக்கும் திரிணாமுல் காங்கிரசுக்கும் எந்தத் தொடர்பும் இல்லை. சிலர் இடதுசாரிக்கட்சிகளின் ஊழியர்களாவர். மேலும் கொல்லப்பட்டுவிட்டதாகச் சொல்லப்படும் சிலர் உயிரோடு உலாவிக் கொண்டிருக்கிறார்கள் என்று குறிப்பிட்டார். இத்தகைய போலியான ஒரு பட்டியலை தயாரித்து அரசின் மீது மோசடியான குற்றச்சாட்டுகளைச் சுமத்தி, குடியரசுத்தலைவர் ஆட்சியை அமல்படுத்த வேண்டும் என்பதே மம்தா பானர்ஜியின் நோக்கமாக இருந்து வருகிறது.
பட்டியலில் உள்ளவர்கள் பற்றிய விசாரணையில் வந்த விஷயங்கள்
1) பட்டியலில் 52வதுஇடத்தில் இருப்பவர் பெயர் அசித் சர்க்கார். இவர் மாவோயிஸ்டு தீவிரவாதி என்பது அனைவருக்கும் தெரிந்ததாகும். 1988 ஆம் ஆண்டு முதல் மக்கள் யுத்தக்குழுவில் அவர் இருந்தார். ஜங்கிள் மஹால் என்ற பகுதியில் முக்கியமான தலைவராக இயங்கி வந்தார். 2003ல் கைது செய்யப்பட்டு 2009 ஆம் ஆண்டில் விடுதலை செய்யப்பட்டார். அவருடைய சகோதரியான ரீடா சர்க்காரும் மாவோயிஸ்டுதான். தான் திரிணாமுல் காங்கிரசைச் சேர்ந்தவர் என்று அசித் சர்க்கார்கூட தெரிவித்ததில்லை.
2) 48வது இடத்தில் இருக்கும் முகமது ஆலம் ராஜர்காட்டில் உள்ள சிகார்பூர் பகுதியைச் சேர்ந்தவர். கால்பந்து போட்டி ஒன்றை அவர் பார்த்துக் கொண்டிருந்தபோது ஏற்பட்ட மோதலில் அஜிஜுல் என்பவரால் ஆலம் சுட்டுக் கொல்லப்பட்டார். திரிணாமுல் காங்கிரசின் சட்டமன்ற உறுப்பினரும், அக்கட்சித் தலைவர் மம்தா பானர்ஜிக்கு மிகவும் நெருக்கமானவருமான அரபுல் இஸ்லாமின் சகோதரர்தான் இந்த அஜிஜுல். அஜிஜுல் தற்போது தலைமறைவாக இருக்கிறார்.
3) 73வது இடத்தில் இருக்கும் பெயர் சங்கர் பிஸ்வாஸ். இவர் மார்க்சிஸ்ட் கட்சியின் ஊழியர். அகதிகள் அமைப்பின் முன்னணித்தொண்டர். தெற்கு 24 பர்கானாவில் அக்டோபர்26, 2009 அன்று இவர் கொலை செய்யப்பட்டார். மார்க்சிஸ்ட் கட்சி சார்பில் அக்டோபர் 30, 2009 அன்று ஏராளமான மக்கள் பங்கேற்ற அஞ்சலிக்கூட்டம் நடந்தது. அதில் சுஜன் சக்கரவர்த்தி மற்றும் சிப்தாஸ் பட்டாச்சார்யா ஆகிய தலைவர்களும் கலந்து கொண்டனர்.
4) அவிஜித் சாஹா என்ற பெயரும் இந்தப் பட்டியலில் சேர்க்கப்பட்டுள்ளது. வடக்கு 24 பர்கானாவில் நடந்த சம்பவம் ஒன்றில் இரு திரிணாமுல் கட்சிக்காரர்களால் இவர் கொல்லப்பட்டார்.
5) 62 வது இடத்தில் பிர்பும் மாவட்டத்தைச் சேர்ந்த யாசின் அலி பைக் என்ற பெயரும் பட்டியலில் உள்ளது. இரண்டரை வயதுக்குழந்தையின் பெயர்தான் அது. நீண்ட நாட்களாக நோய் வாய்ப்பட்டு இந்தக் குழந்தை இறந்துவிட்டது.
6) ஆறாவது இடத்தில் இருக்கும் பெயர் ஜெய்தேப் பக். தெற்கு 24 பர்கானாவில் உள்ள பருய்பூர் என்ற பகுதியைச் சேர்ந்தவர். பருய்பூரில் அந்தப் பெயரைக் கொண்ட யாரும் கொல்லப்படவோ அல்லது உயிரிழக்கவோ இல்லை.
7) 22வது இடத்தில் இருக்கும் பெயர் நந்திகிராமத்தைச் சேர்ந்த மீரா நாசின். அந்தப் பெயரைக் கொண்ட யாரும் கொல்லப்படவில்லை. அப்படி யொருவர் இருப்பதை நந்திகிராமத்தைச் சேர்ந்த திரிணாமுல் காங்கிரஸ் தலைவர் அபு தஹேரே மறுத்துள்ளார்.
8) 71வது இடத்தில் இருக்கும் பெயர் வடக்கு 24 பர்கானாவைச் சேர்ந்த சியாமல் ஹசாரி. காவல்துறையின் ஆவணங்களின்படி, அந்தப் பெயரைக் கொண்ட யாரும் கொல்லப்படவோ அல்லது உயிரிழக்கவோ இல்லை. சொல்லப்போனால், அந்தப் பெயருடைய எந்த திரிணாமுல் காங்கிரஸ் தொண்டரும் இந்தப் பகுதியில் இயங்கவில்லை.மார்க்சிஸ்டு கட்சி சார்பில் பிரதமரிடம் அளிக்கப்பட்ட பட்டியலை திரிணாமுல் காங்கிரஸ் உள்ளிட்ட யாரும் இதுவரை மறுக்கவில்லை. இதனால்தான் பிரச்சனையைத் திசை திருப்பி விடுவதற்காக மோசடிப் பட்டியலை மம்தா பானர்ஜி தலைமையிலான திரிணாமுல் காங்கிரஸ் அளித்துள்து. நாட்டை எதிர்நோக்கியுள்ள மிகப்பெரிய பயமே மாவோயிஸ்டுகள் பயங்கரவாதம்தான் என்று கூறிய பிரதமர் மன்மோகன்சிங், மார்க்சிஸ்டு கட்சி சார்பில் அளித்த மனுவிற்கு இன்னும் பதிலளிக்காமல் இருக்கிறார்.
